Skip to main content

Northern Provincial Council

உயர் பதவிகளில் இருக்கும் பலரிடம் இன்று தலைமைத்துவப் பண்பைக் காணவில்லை. இதனால் மக்களுக்கு அரசாங்கச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. – கௌரவ ஆளுநர்

உயர் பதவிகளில் இருக்கும் பலரிடம் இன்று தலைமைத்துவப் பண்பைக் காணவில்லை. இதனால் மக்களுக்கு அரசாங்கச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கு மாகாணத்துக்குரியது மாத்திரமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரிய பிரச்சினை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ என்னும் தலைப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25.05.2025) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனதுரையில், கல்வியில் உயர்நிலையை அடைவதால் மாத்திரம் நாம் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியாது. கல்வியுடன் நாம் ஏனைய திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கலை, விளையாட்டுக்களில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

இவற்றுக்கு மேலாக தலைமைத்துவப்பண்பை நாங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். எங்கள் சமூகத்துக்கு இது இன்று தேவையாக இருக்கின்றது. சிறந்த தலைமைத்துவப் பண்பு உள்ளவர்களாலேயே சமூகத்தில் மிளிர முடியும்.

நீங்கள் உங்கள் கல்வியுடன் சேர்த்து உங்களை ஆளுமையுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். கல்வியில் உயர்ந்த நிலைக்கு வருபவர்களால் சமூகத்துக்கு சேவையாற்ற முடியாது. அவர்கள் தங்கள் பண்புகளையும் அதற்கு ஏற்றவாறு வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் இந்தச் சமூகத்துக்கு உதவ முடியும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக இலங்கை உயர்தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் எல்.ரோட்ரிகோ, உயர்தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணத்தின் பணிப்பாளர் ஜெ.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உயர்தொழில்நுட்பவியல் நிறுவகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள், சான்றிதழ்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். அத்துடன் உயர் தொழில்நுட்பவியல் நிறுவக மாணவர்களால் கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.