Skip to main content

Northern Provincial Council

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர்

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது. ஆனால் இன்று பல தெரிவுகள் – வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன.

இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பாக இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும். வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன், என்றார்.