Skip to main content

Northern Provincial Council

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்க வேண்டும். – கௌரவ ஆளுநர்

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (18.05.2025) நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்து மேலதிக நிதிகளைக் கோரவேண்டும். அதேநேரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும். அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறும் ஆளுநர் திணைக்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் புதிய கட்டுமானங்களை அலுவலகத் தேவைகளின் நிமிர்த்தம் அமைப்பதை விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர் அவ்வாறான திட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டார். தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வரும் சுற்றுலாவிகள், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பிரதேசங்களில் தமது இயற்கை உபாதைகளைப்போக்குவதற்குரிய மலசலகூடங்கள் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் எதிர்காலத்தில் இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கவனம் செலுத்தவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகள், திட்டமிடல் பணிப்பாளர், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.