Skip to main content

Northern Provincial Council

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகவுள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எமது மாகாணம் கடந்த சில ஆண்டுகளாகப் பரீட்சைப் பெறுபேறுகளில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும், அதனை மாற்றி அமைக்கும் வல்லமை உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கென, குறிப்பாக மேலதிக கற்றல் தேவைப்பட்ட மாணவர்களுக்காக எனது நேரடி மேற்பார்வையில் விசேட இணையவழி கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அந்த முயற்சிகளும், உங்களின் கடின உழைப்பும் நிச்சயம் வீண் போகாது.

எந்த இடத்தைத பெறுகிறோம் என்பது ஒரு புள்ளிவிவரம் மட்டுமே. ஆனால், எமது மாணவர்கள் அனைவரும் சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்து, உயர்தரக் கல்விக்குத் தகுதி பெற வேண்டும் என்பதே எனது முதன்மையான எதிர்பார்ப்பாகும்.

எனவே, எவ்வித பதற்றமும் இன்றி, முழுமையான தன்னம்பிக்கையுடனும், தெளிந்த மனதுடனும் பரீட்சையை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் படித்தவற்றைத் தெளிவாகவும், நிதானமாகவும் விடைத்தாளில் பதிவு செய்யுங்கள்.

உங்களின் வெற்றி, உங்களின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, முழு வடக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்க்கும். உங்களின் எதிர்காலக் கனவுகள் மெய்ப்பட இறைவனைப் பிரார்த்திப்பதோடு, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது வெற்றிக்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன், என்று ஆளுநர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திலிருந்து பாடசாலை பரீட்சார்த்திகளாக 20,887 பேரும், தனியார் பரீட்சார்த்திகளாக 5,412 பேருமாக 26,299 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்காக 248 பரீட்சை நிலையங்கள் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.