Skip to main content

Northern Provincial Council

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் காணி நடமாடும் சேவை கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் காணி நடமாடும் சேவை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (08.05.2025) இடம்பெற்றது.

காணிப் பிணக்குத் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுநருக்கு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையடுத்தே, காணி நடமாடும் சேவை நடத்தப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைக்கு அமைவாக தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. பெரும்பாலான தரப்பினர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். தீர்வுகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை நீதிமன்றை நாடுமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. உறவினர்களிடையேயான காணிப்பிணக்குகளே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் திருமதி நளாயினி இன்பராஜ், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலரும், காணி ஆணையாளருமான அ.சோதிநாதன், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலர்கள், காணி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.