Skip to main content

Northern Provincial Council

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (05.06.2025) நடைபெற்றது.

இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருந்தபோதும், செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த சில சவால்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளணி வளம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் உள்ள சவால்களுக்கு இன்றைய கலந்துரையாடலில் உரிய தீர்வுகள் முன்வைக்கப்பட்டதுடன் ஒரு மாத காலத்தினுள் இதனை ஆரம்பிப்பதற்கு ஏற்றவாறு புரிந்துணர்வு உடன்பாட்டை விரைவில் கைச்சாத்திடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாஸ், மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவானந்தா, பேராசிரியர் சி.ரகுராமன் ஆகியோர் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்ததுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி ‘சூம்’ (zoom) செயலி ஊடாக இணைந்திருந்தார்.