Skip to main content

Northern Provincial Council

கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில், வடக்கு மாகாணத்தில் வாழும் அனைத்துக் கிறிஸ்தவ மக்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறுதினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மரணத்தின் இருளை வென்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தமையானது, துன்பத்தின் மீது நம்பிக்கையும், வெறுப்பின் மீது அன்பும், இருளின் மீது ஒளியும் எப்போதும் வெற்றிபெறும் என்ற நித்திய உண்மையை மனித குலத்துக்கு உணர்த்துகின்றது. இது அர்ப்பணிப்பின் ஊடாகப் பிறக்கும் புதிய வாழ்வின் மீதான நம்பிக்கையை எமக்குத் தருகிறது.

வடக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை, உயிர்த்த ஞாயிறு தரும் ‘மீண்டெழுதல்’ என்ற செய்தி மிகவும் ஆழமான பொருளைக் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் பல சவால்களையும் கடினமான சூழ்நிலைகளையும் கடந்துவந்த எமது வடக்கு மாகாணம், தற்போதைய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் விசேட கரிசனையாலும் வழிகாட்டலாலும் இன்று நம்பிக்கையுடன் மிக விரைவாக மீண்டெழுந்து, புதியதொரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கும், சமூகக் கட்டியெழுப்பலுக்கும், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கும் இந்த மீண்டெழுதலின் உத்வேகம் மாபெரும் சக்தியாக அமையும் என நான் திடமாக நம்புகின்றேன்.

அதேவேளை, உலகளாவிய ரீதியில் குறிப்பாக மத்திய கிழக்கில் நடைபெறும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்புகள் எமது நாட்டைத் தாக்காதிருக்கவும், உலகெங்கும் அமைதியும் சுபீட்சமும் நிலைத்திருக்கவும் இந்த உன்னதமான திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.

இயேசு நாதர் போதித்த அன்பு, பொறுமை, மன்னிப்பு மற்றும் தியாகம் ஆகிய உன்னத குணங்களை எமது இதயங்களில் நிலைநிறுத்தி, இன, மத பேதங்களை மறந்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் நாம் மேலும் பலப்படுத்த வேண்டும். ‘வளமான வடக்கு மாகாணம்’ என்ற எமது பொதுவான இலக்கை அடைந்துகொள்ள, அனைத்து மக்களினதும் ஒற்றுமையும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் மிகவும் அவசியமானதாகும்.

இந்த உயிர்த்த ஞாயிறுத் திருநாளின் ஆசீர்வாதங்களால், உங்கள் அனைவரதும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அமைதி, மகிழ்ச்சி, சுபீட்சம் மற்றும் சகோதரத்துவம் நிறையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் இனிய உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துகள்!