Skip to main content

Northern Provincial Council

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (03.06.2025) நடைபெற்றது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் இந்தச் செயற்பாட்டுக்கைநூல் தொடர்பாக விளக்கமளித்தார். ஆசிய மன்றத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் செயற்பாட்டுக்கைநூலை உருவாக்கிய ஆசிய மன்றத்தின் சிரேஷ;ட தொழில்நுட்ப ஆலோசகர், இதன் நோக்கம் இதனூடாக எதிர்காலத்தில் தரவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பில் தெளிவுபடுத்தினார். அத்துடன் திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படப்போகின்றது என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது குறிப்பிடுகையில், அரசாங்கமும் டிஜிட்டல் மயப்படுதலை முன்னெடுத்துவரும் நிலையில் இந்தத் திட்டம் அவசியமானதுதான் என்றார். கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்புக்கள் ஊடாக உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் உதவிகள் கிடைத்தமையும் நடந்திருக்கின்றது என்று குறிப்பிட்டார். எனவே இத்தகைய தவறுகளை இல்லாமல் செய்வதற்கு இவ்வாறானதொரு முயற்சி அவசியம் எனத் தெரிவித்தார். பின்தங்கிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவது அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கே எனக் குறிப்பிட்ட ஆளுநர் அது சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உதவி பெறுவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லவேண்டும் எனவும் ஆனால் நடைமுறையில் அவ்வாறான நிலைமையைக் காணமுடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர் செயற்பாட்டுக்கைநூலில் உள்ளடக்கவேண்டிய விடயங்கள் தொடர்பாக கருத்துக்களும், ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலாளர், சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர், சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், யாழ். மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் உள்ளிட்டோர் நேரடியாகக் கலந்துகொண்டதுடன், வடக்கிலுள்ள ஏனைய மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ‘சூம்’ (zoom) செயலி ஊடாக இணைந்து கொண்டனர்.