Skip to main content

Northern Provincial Council

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இரு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பு, தேவையான உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.