Skip to main content

Northern Provincial Council

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

நடத்தை மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப்பண்புள்ளவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ (NEXTGEN LEADERS) தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை (30.10.2025) நடைபெற்றது. மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் 8 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்துகொண்டனர். காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரையில் இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளதுடன் இன்று மாலை மாணவர்களின் பெற்றோருக்கான செயலமர்வும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனதுரையில், ஒரு நிறுவனத்தின் வெற்றியும் தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கின்றது.

இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. ஒரு வேலையை எவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சிந்திப்பதைவிட அதைச் செய்யாமல் விடுவதற்கான காரணங்களைத் தேடுபவர்களாகவே சில திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளனர். சேவைபெற வருபவர்கள் எமது மக்கள் என்று அந்தத் தலைவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று நினைப்பதில்லை. இவற்றையெல்லாம் மாற்றியமைக்கவேண்டுமாக இருந்தால், அடுத்த தலைமுறையாவது மிகச் சிறந்த தலைமைத்துவப்பண்புடன் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

புத்தாக்க சிந்தனையையும் தலைமைத்துவப் பண்பின் ஊடாக நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் எங்கள் மக்களுக்காக எவ்வாறான விடயங்களைப் புதிதாகச் செய்யலாம், அதன் ஊடாக அவர்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று சிந்திக்கின்ற தலைவர்களாக நீங்கள் உருவாகவேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது, என்றார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சு.லாவண்யா, கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அ.க.சிவனருள்ராஜா, கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் அதிபர் அ.பங்கயற்செல்வன் மற்றும் வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.