Skip to main content

Northern Provincial Council

போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள், நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை – கௌரவ ஆளுநர்

போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள் – நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.

வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (06.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதிலிருந்து மனிதநேயம் அமைப்பை தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். போருக்கு முன்னரும், போரின் பின்னரும் அந்த அமைப்பு இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்தார். அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.

இந்த நிறுவனத்தின் தலைவி திருமதி கைலாசபிள்ளை அவர்கள் பல தடவை ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறுவார். நாங்கள் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்வதைவிட அவர்களை வலுப்படுத்தி சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யவேண்டும் எனக் குறிப்பிடுவார். அது மிகச் சரியானது. அந்த வழியில் பயணிப்பதை நான் வரவேற்கின்றேன், என்றார் ஆளுநர்.