Skip to main content

Northern Provincial Council

சேவைகளைச் செய்வதற்கான ஆர்வம் – விருப்பம் அலுவலர்களுக்கு முக்கியமாகும்.; மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் – நட்பாகவும் – தரமானதாகவும் செய்து கொடுக்கவேண்டும்.

அரசாங்கம் எண்ணிமப்படுத்தலை (Digitalization) முன்னெடுக்கவுள்ள நிலையில் அதற்கு எமது அலுவலர்களை நாங்கள் இப்போதே தயார்படுத்தி முன்மாதிரியாகச் செயற்படவேண்டும். பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் குறிப்பிட்டதைப்போல ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எமது அலுவலர்களுக்கு கற்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (17.06.2025) வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், அலுவலர்களுக்கு இவ்வாறான பயிற்சிகள் காலத்துக்கு காலம் அவசியம். இவ்வாறான பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட அலுவலர்களது நடத்தைகளில் மாற்றங்கள் தெரியவேண்டும். பயிற்சிகளைப்பெற்றுக் கொள்வதற்கு முன்னர் இருந்தமையைப்போன்று அல்லாமல் பயிற்சியைப்பெற்ற பின்னர் சிறப்பாக அவர்கள் செயற்படவேண்டும்.

மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்கான ஆர்வம் – விருப்பம் அலுவலர்களுக்கு முக்கியம். மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் – நட்பாகவும் – தரமானதாகவும் செய்து கொடுக்கவேண்டும். இன்று அது அருகிச் செல்கின்றது. எமது அலுவலர்களிடம் ஒரு விடயத்தை பின்தொடர்ந்து நிறைவேற்றி முடிக்கும் பழக்கம் இல்லை. இதை மாற்றியமைக்கவேண்டும். அலுவலகத்துக்கு ஒவ்வொரு நாள் காலையில் செல்லும்போது என்னென்ன வேலைகளைச் செய்யவேண்டும், கடந்த நாள் வேலைகளின் பின்தொடர்தல்கள் என்ன என்பது பற்றிய சிந்தனைகள் இருக்கவேண்டும். மக்களுக்கான சேவைகளைச் செய்யும்போதுதான் நாங்கள் இருக்கின்ற பதவிகளுக்கு அங்கீகாரமாக இருக்கும்.

அதேபோல சகல விடயங்களிலும் வெளிப்படைத்தன்மை முக்கியம். வெளிப்படைத்தன்மையாக எதைச் செய்தாலும் யாருக்கும் நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை, என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பயிற்சி அலகின் பணிப்பாளர் திருமதி ஹேமசிந்துயா சுமன், எதிர்காலத்தில் பயிற்சி அலகின் ஊடாக டிப்ளோமா கற்கை நெறிகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணியும் பயிற்சியும் செ.பிரணவநாதன், எதிர்காலத்தில் அலுவலகப் பணிகளுக்குத் தேவையான ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளக் கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், இந்தப் பயிற்சிநெறிகளுக்கு பரீட்சைகளை நடத்தி அலுவலர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தெரிவு செய்வதைவிடுத்து, அதிகப் பிரிவுகளாக கற்கைநெறிகளை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லவேண்டும் எனத் தெரிவித்தார்.