Skip to main content

Northern Provincial Council

யாழ். மாவட்டத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை கௌரவ ஆளுநர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (30.05.2026) சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை ஒளிரச் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஆளுநர், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தினராலும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (அன்னதானம்) நிகழ்வையும் ஆளுநர் பொதுமக்களின் பாவனைக்காகத் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வட பிராந்தியக் கடற்படை கட்டளைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மற்றும் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சூயிரல் ஜெனரல் சாய் முரளி ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக ஒளிரச் செய்தனர். இதனையடுத்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தன்சல்’ நிகழ்வும் அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாகவிகாரையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வுகளில் நாகவிகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட வணக்கத்துக்குரிய மதத் தலைவர்கள், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வட பிராந்தியக் கடற்படை கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் செயலாளர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் உடனிருந்தனர். மேலும், இந்த நிகழ்வில் வெசாக் அலங்காரப் போட்டிகளில் மிகச் சிறந்த வடிவமைப்புக்காக முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய இராணுவப் படைப்பிரிவுகளுக்கு ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.