Skip to main content

Northern Provincial Council

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களை வடமாகாணத்தவர்கள் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழில் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை மாலை (17.07.2025) இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் வைபத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில்,

இன்றைய காலத்தில் தொழிற் பயிற்சி மிக முக்கியமானது. அதன் அவசியம் இப்போது எல்லோராலும் உணரப்படுகின்றது. அரச வேலை வாய்ப்பு என்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவாக மாறிக் கொண்டு வருகின்ற சூழலில், தனியார் வேலை வாய்ப்பையோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பையோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தொழிற் கல்வி அவசியமானது. அதுவும் இவ்வாறான சான்றிதழ் கற்கை நெறிகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

வடக்கு மாகாணத்தில் போரால் அழிவடைந்த தொழிற்சாலைகளை மீள உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த தொழிற்சாலைகள் இங்கு மீள இயங்கும்போது தொழிற் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை கிடைக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது.

எதிர்காலத்தில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளாமல் தொழில்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகி வருகின்றது. எனவே, இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் நீங்களும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தத் தொழிற் கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறவேண்டும்.

பாடசாலை இடைவிலகலில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உள்ள நிலையில், இவ்வாறான தொழிற் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்பவர்கள் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். எனவே, கல்வியிலிருந்து இடைவிலகும் ஆண்களை இவ்வாறான தொழிற்முயற்சிகளை நோக்கி ஈர்க்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கலந்துகொண்டார்.