Skip to main content

Northern Provincial Council

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடலோரப் பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுகை செய்வது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்தார். 16,000 ஏக்கர் அடையாளப்படுத்தப்பட்டு பயனாளிகளுக்குத் தேவையான தென்னம்பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஆண்டும் அதன் தொடர்ச்சியான திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, கௌரவ ஆளுநர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தின் சாத்தியமான கரையோரப் பிரதேசங்களில் தென்னங்கன்றுகளை நடுகை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார். கடற்றொழிலாளர் சங்கங்கள் சிலவும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் ஒரு கிராமத்தைத் தெரிவு செய்து அதன் கடற்கரையோரங்களில் தென்னங்கன்றுகளை நடுகை செய்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வடக்கு மாகாணத்தில் பரவலாக அவதானிக்கப்பட்டுள்ள வெள்ளை ஈயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர், தற்போதைய வெப்பமான காலநிலையுடன் மீண்டும் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். உயிரியல் கட்டுப்பாட்டு முறையே சிறந்த தீர்வு என்ற அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள விவசாய ஆராய்ச்சிப் பிரிவு, வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொண்டுள்ள ஆய்வுகளை விரைவுபடுத்த ஆளுநர் கேட்டுக்கொண்டார். அத்துடன் தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஆராய்ச்சிப் பிரிவுக்கும் துறைசார் அமைச்சருக்கும் இது தொடர்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆராய்ச்சிப் பிரிவை இங்கு அழைக்க எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், விவசாய பீடாதிபதி, விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றனர்.