Skip to main content

Northern Provincial Council

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.

தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

குத்துச்சண்டை விளையாட்டுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் அதன் தரங்கள் போதுமானதாக இல்லை எனவும், அவற்றை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வீரர்களைத் தயார்படுத்துவதற்குத் தேவையான நிதித் தேவைப்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் குத்துச்சண்டையில் பதக்கங்களை வென்ற போதிலும், அதிகாரிகளால் உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் வெளியிடப்பட்டது. ஏனைய மாகாணங்களில் வர்ண இரவு நிகழ்வுகளில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன் ஒப்பிடுகையில், வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் தொகை மிகக் குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் சாதித்த வீரர்கள் காயமடையும் சந்தர்ப்பங்களில், அவர்கள் தொடர்பில் போதிய கரிசனை செலுத்தப்படுவதில்லை எனவும், தனியார் பயிற்றுவிப்பாளர்களால் உருவாக்கப்படும் வீரர்கள் மற்றும் அந்தப் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பில் மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

வீரர்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆளுநர், விளையாட்டுத்துறைப் பணிப்பாளருக்குப் சில பணிப்புரைகளை வழங்கினார்:

ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, அங்குள்ள பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீர, வீராங்கனைகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிய வேண்டும்.

வீரர்களின் தேவைகளுக்கு ஏற்ப உபகரணங்களை வழங்குவதுடன், ஏனைய மாகாணங்களில் வீரர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச வசதிகளையாவது எமது மாகாண வீரர்களும் அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கான சத்துணவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைத் தற்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்ப அதிகரிப்பதற்குரிய மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.