Skip to main content

Northern Provincial Council

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ள விவசாய கம்பனிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிலைமை உருவாக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர்

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் (ASMP) வடக்கில் உருவாக்கப்பட்டுள்ள 17 விவசாய கம்பனிகளும் நேரடியாக ஏற்றுமதி செய்யும் நிலைமை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இத்தகைய விவசாயக் கம்பனிகளை வேறு தரப்புக்களாக கருதாது அவர்களுக்குரிய வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புக்களை விவசாயத் திணைக்களம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

விவசாயக் கம்பனிகள் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்த்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்  செவ்வாய்க்கிழமை (22.04.2025) இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் விஜிதன், இந்தத் திட்டத்தின் உருவாக்கம் மற்றும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் சுருக்கமாகத் தெரியப்படுத்தினார். 17 விவசாயக் கம்பனிகளின் கீழும் 6,500 விவசாயிகள் நேரடியாகவும் 25,000 விவசாயிகள் வரை மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள 60 விவசாயக் கம்பனிகளில் முதலிடத்தை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முல்லை அக்ரோ பிஸ்னஸ் என்ற விவசாயக் கம்பனியே பெற்றுக்கொண்டது எனவும் சுட்டிக்காட்டினார். விவசாய நவீன மயமாக்கல் திட்டம் கடந்த ஆண்டு இறுதியுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில், இந்தக் கம்பனிகள் தொடர்ந்து இயங்குவதற்கான ஒத்துழைப்புக்கள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண ஆளுநர், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் தொடர்ச்சியாக கொள்வனவு செய்யப்பட வேண்டும் எனவும் விலை தளம்பல் ஏற்படக் கூடாது என்றும் குறிப்பிட்டார். விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யவேண்டும் என்று வலியுறுத்திய ஆளுநர் அதை நோக்கியே அனைத்து விவசாயக் கம்பனிகளும் இயங்கவேண்டும் எனத் தெரிவித்தார். விவசாயிகளிடமிருந்து குறைவான விலைக்கு விவசாய உற்பத்திப் பொருட்களைப்பெற்று அதை கூடுதல் விலைக்கு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் செயற்பாடு தொடர்கின்றமையை வேதனையுடன் குறிப்பிட்ட ஆளுநர் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து இலாபத்தைப் பெற்றுக்கொள்ளும் இந்த விவசாயக் கம்பனி நடைமுறை இன்னமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் எந்த விவசாய உற்பத்திப் பொருள் உற்பத்தியாகும் என்ற விவரங்கள் திணைக்களங்களிடம் இல்லாமல் இருப்பது துரதிஷ;டவசமானது எனக் குறிப்பிட்ட ஆளுநர், அவ்வாறான விவரங்கள் இருக்குமாக இருந்தால் அந்தக் காலப் பகுதிகளில் குறிப்பிட்ட விவசாய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அல்லது அதன் மீதான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோர முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அதிகாரிகள் எதிர்காலத்திலாவது அந்த விவரங்களை சேகரிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் விவசாயக் கம்பனிகளின் தலைவர்கள் தமது தேவைப்பாடுகளை முன்வைத்தனர். அதிகளவு இளையோரை விவசாயத்தில் ஊக்குவிப்பதற்கு கம்பனிகள் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கான போதியளவு காணிகள் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர். விவசாய நவீன மயமாக்கல் திட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமது விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். விவசாயப் போதனாசிரியர்கள் களப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளைச் சந்திப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். மேலும், இந்தத் திட்டம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறி விவசாயத் திணைக்களத்தினர் தம்மை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகின்றனர் எனவும் குறிப்பிட்டனர். இவற்றுக்கும் அப்பால் பல இடங்களில் விவசாயக் கம்பனிகள் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டடங்கள் பல்வேறு திணைக்களங்களுக்குச் சொந்தமானவை என்றும் அவற்றை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதில் இடர்பாடுகள் இருக்கின்றன என்றும் விவசாயக் கம்பனிகளின் தலைவர்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

விவசாயத் திணைக்களத்தினர் விவசாய நவீன மயமாக்கல் திட்டம் தொடர்பில் எதுவும் தெரியாது என்று கூற முடியாது எனவும், எல்லாத் திட்டங்களும் அரசாங்கத்தின் அனுமதியுடனேயே நடத்தப்படுகின்றன என்பதைக் கவனத்திலெடுத்து செயற்படவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். மேலும், திணைக்களங்களின் கட்டடங்கள் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன என்று குறிப்பிட்ட ஆளுநர் அவை தொடர்பான இடர்பாடுகளை தீர்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் கீழ் இயங்கும் ஆராய்ச்சிக் குழு ஒவ்வொரு விவசாயக் கம்பனிகளின் செயற்பாடுகளையும் இரு மாதங்களுக்குள் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநருக்கு அறிக்கை சமர்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், பிரதி விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றனர்.