Skip to main content

Northern Provincial Council

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொண்டு, அந்த மாற்றங்களுக்குள் எம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். ஒரு மனிதனின் அறிவிலும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கருவியாகப் பயிற்சி அமைகின்றது. எனவே, நீங்கள் பெற்ற பயிற்சியின் உண்மையான பலன் உங்கள் பணியில் வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் கீழ் இயங்கும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு நடத்திய பல்வேறு கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகால் தொடர்ச்சியாக பல்வேறு பயிற்சிகளும் கற்கைநெறிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, திணைக்களத் தலைவர்கள் தமது பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப முன்னெடுக்கப்படும் திணைக்கள ரீதியான பயிற்சிகள் மிகச் சிறந்த பயன்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் சான்றிதழ் பெற்ற உத்தியோகத்தர்கள் தமது பயிற்சி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது, இவ்வாறான பயிற்சிகளின் பயன்மிக்க தாக்கத்தைத் தாம் உணர முடிந்ததாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். பொதுவான பயிற்சிகளுக்கும், குறிப்பிட்ட திணைக்களத்தின் தேவைகளுக்கேற்ப வழங்கப்படும் பயிற்சிகளுக்கும் இடையில் கணிசமான வேறுபாடு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவான பயிற்சி நிகழ்ச்சிகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன், விண்ணப்பித்த பின்னரும் சிலர் பயிற்சிகளில் பங்கேற்காத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், திணைக்களத் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும் பயிற்சிகளில் பணியாளர்களின் பங்கேற்பு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பல்வேறு திணைக்களங்களின் கீழ் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய நிலை காணப்படுவதால், அவர்கள் தாம் பணியாற்றும் ஒவ்வொரு துறையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் தேவையான அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொள்வது அவர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு கிளிநொச்சியில் அமைந்துள்ளமை காரணமாக சில மாவட்டங்களில் இருந்து பயிற்சிகளில் பங்கேற்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக முன்வைக்கப்பட்ட கருத்தையும் ஆளுநர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். பங்கேற்பாளர்களுக்கு வழங்கக்கூடிய வசதிகள் மற்றும் அவர்களுக்கு இலகுவான மாவட்டங்களில் பயிற்சிகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் பிரதம செயலாளருடன் ஆலோசித்து, எதிர்காலத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 111 உத்தியோகத்தர்களும், மாகாண உள்ளகக் கணக்காய்வு அலகின் கீழ் 25 உத்தியோகத்தர்களும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், மாகாண உள்ளகக் கணக்காய்வாளர், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கூட்டுறவு உதவி அபிவிருத்தி ஆணையாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.