Skip to main content

Northern Provincial Council

102ஆவது சர்வதேச கூட்டுறவுதின விழா, யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் நடாத்தப்பட்டது

யாழ்ப்பாண மாவட்டம் ஒரு காலத்தில் கூட்டுறவுத்துறையில் கோலோச்சிய மாவட்டம். ஆனால் இன்று வீழ்ச்சியடைந்திருக்கின்றது. காலத்துக்கு ஏற்றவகையில் எங்களை நாங்கள் மாற்றியமைப்பதன் ஊடாகவே கூட்டுறவுத்துறையை தக்கவைக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் நடத்திய 102ஆவது சர்வதேச கூட்டுறவுதின விழா, சமாச கூட்டுறவாளர் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை (13.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் செ.செல்வராசா தனது தலைமை உரையில், இன்றைய முதன்மை விருந்தினர் ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் எங்களது சங்கங்களுக்கு பல உதவிகளைச் செய்திருக்கின்றார். எங்களது பல கிளை நிலையங்கள் மூடப்பட இருந்த நிலையில் மாவட்டச் செயலராக இருந்த அவர், பிரதேச செயலர்களுடன் கலந்தாலோசித்து அவற்றை இயங்குநிலைக்கு மாற்றினார். அவர், மாவட்டச் செயலர் பதவியிலிருந்து சென்ற பின்னர் சில கிளை நிலையங்கள் மூடப்பட்டன என்று குறிப்பிட்ட நிகழ்வின் தலைவர், ஆளுநர் அவர்கள் கடந்த காலங்களில் ஆற்றிய சேவைக்காக நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து முதன்மை விருந்தினர் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், எமது சில கூட்டுறவு அமைப்புக்களின் தவறான முகாமைத்துவம் காரணமாக அவை மூடப்பட்டுள்ளன. இதனால் பலர் தொழில்களை இழந்துள்ளனர். ஆனால் யாழ்ப்பாண மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் திறம்பட இயங்கி வருக்கின்றது. பலருக்கு உங்களை நான் முன்னுதாரணமாகச் சொல்லியிருக்கின்றேன். தற்போதைய புதிய அரசாங்கம் கூட்டுறவுத்துறையை மேம்படுத்த உறுதிபூண்டிருக்கின்றது. எனவே எம்மால் கூடியளவு ஒத்துழைப்புக்களை உங்களுக்கும் வழங்கக் கூடியதாக இருக்கும். பனை தென்னை சங்கங்களின் அங்கத்தவர்களின் வாழ்வாதார மேம்பாட்டையும் உறுதிப்படுத்தி அவர்களின் தொழில்வாய்ப்பையும் எதிர்காலத்தில் விரிவாக்கவேண்டும். பனை மற்றும் தென்னை ஊடாக மிகச் சிறந்த வருமானத்தைப் பெற முடியும். குறிப்பாக பனை எமது மாகாணத்தின் சொத்து. அது இன்று அழிக்கப்படுகின்றது. அதை மீள எல்லோரும் சேர்ந்து உருவாக்கவேண்டும், என்றார்.

இந்த நிகழ்வில், சிறந்த அங்கத்தவர்கள், பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அங்கத்தவர்களின் பிள்ளைகளும் கௌரவிக்கப்பட்டனர்.