Skip to main content

Northern Provincial Council

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம்

வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களான குருக்கள்புதுக்குளம், கந்தசாமிநகர், கப்பாச்சி, வீரபுரம் மற்றும் நித்தியநகர் உள்ளிட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (05.06.2026) நேரடியாக பயணம் செய்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், பல நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார்.

இந்த விசேட களப் பயணத்தில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர ஆகியோரும் ஆளுநருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்தனர்.

நித்தியநகர் கிராமத்தின் தேவைகள்

நித்தியநகர் கிராமத்துக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர், அங்கு இயங்கிவரும் திருவள்ளுவர் முன்பள்ளியைப் பார்வையிட்டனர். போதிய வசதிகளின்றி இயங்கி வரும் குறித்த முன்பள்ளியின் தேவைகளைக் கல்வித் திணைக்களத்தின் ஊடாக உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார். அத்துடன், தமது கிராமத்துக்குக் கிராம அலுவலர் வாரத்துக்கு ஒரு தடவையாவது வருகை தருவதை உறுதிப்படுத்துமாறு மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதாக மாவட்டச் செயலாளர் உறுதியளித்தார். நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினையை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாகத் தீர்த்து வைப்பதற்கும் ஆளுநரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மக்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதான போக்குவரத்துப் பிரச்சினையான நித்திக்குளம் – நித்தியநகர் வீதியை இந்த ஆண்டு இறுதிக்குள் புனரமைக்க ஆளுநர் அறிவுறுத்தினார். ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட குறித்த வீதியை, அதற்கான மீள் கட்டுமான நிதியினூடாகப் புனரமைக்க முடியும் என உள்ளூராட்சி உதவி ஆணையாளர் குறிப்பிட்டார். காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ள இவ்வீதியின் கரையோரங்களில் உள்ள பற்றைகளைத் துப்புரவு செய்வதற்கு வனவளத் திணைக்களம் தடையாக இருப்பதாக மக்கள் சுட்டிக்காட்டியதையடுத்து, சிரமதானம் ஊடாக அதனைச் சீர்செய்வதற்கும், தேவையான உபகரணங்களை உள்ளூராட்சி மன்றம் ஊடாக வழங்குவதற்கும், வனவளத் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கந்தசாமிநகர் மக்களின் கோரிக்கைகள்

கந்தசாமிநகர் மக்கள், ‘டித்வா’ பேரிடரின்போதான இழப்பீடுகள் தமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர். அதனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும், மாற்று இடங்களுக்குச் செல்வதற்குத் தமது கிராமத்தின் ஒரு பகுதியினரே சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், தாம் இதே கிராமத்திலேயே தொடர்ந்தும் வசிக்க விரும்புவதாகவும் மக்கள் குறிப்பிட்டனர். விவசாய நடவடிக்கைகளுக்காகச் சின்னப்பட்டிவலிக் குளத்தைப் புனரமைத்துத் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ‘பிரஜாசக்தி’ வேலைத்திட்டத்தினூடாக அதனை முன்னெடுப்பதற்குப் பிரதி அமைச்சர் பணிப்புரை விடுத்தார். கிராமத்தில் பொதுக் கட்டடம் ஒன்றை அமைத்துத் தருமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கப்பாச்சி மற்றும் முகத்தான்குளம் பகுதிகள்

முகத்தான்குளம் ஊடாகக் கப்பாச்சிக்குச் செல்லும் பாலம் பேரிடரினால் சேதமடைந்துள்ளமையையும், குளக்கட்டின் ஊடாகச் செல்லும் ஒடுங்கிய பாலத்தின் உறுதித்தன்மை குலைந்துள்ளமையையும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர். மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முகத்தான்குளத்தின் வான்பாயும் பகுதியிலுள்ள கப்பாச்சி பாலத்தைப் புனரமைப்பதற்கான கேள்விகோரல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

கப்பாச்சி கிராமத்திலுள்ள அன்புபுரம் நாமகள் மகாவித்தியாலயத்துக்குச் சென்ற குழுவினர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினர். வனவளத் திணைக்களத்தால் தாம் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள், ‘டித்வா’ இழப்பீடுகள், பாடசாலைக்கான இணைய வசதி மற்றும் பாதுகாப்பு வேலி என்பன தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் இக்கிராம மக்களுக்குக் காணிகள் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார். கிராமத்திலுள்ள 10 வீடுகளுக்கான மின் இணைப்பு வழங்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதோடு, கிராமத்துக்கான குடிநீர்த் திட்டத்திற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமை குறித்தும் பிரதி அமைச்சரால் விளக்கமளிக்கப்பட்டது.

வீரபுரம் கிராம உட்கட்டமைப்பு

வீரபுரம் கிராமத்தின் உள்ளக வீதிகள் பேரிடரின் பின்னர் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளமையை ஆளுநர் தலைமையிலான குழுவினர் அவதானித்தனர். வீதி மின்விளக்குகள் போதியளவின்மை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக உரிய துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிப்புரைகளை ஆளுநர் வழங்கினார்.

வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலக விசேட மீளாய்வுக் கூட்டம்

இந்தக் களப் பயணங்களைத் தொடர்ந்து, வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஆளுநர், பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களின் பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

களப் பயணத்தின்போது கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்புடைய திணைக்களங்கள் ஊடாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் காலவரையறையுடன் கூடிய பணிப்புரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.

‘டித்வா’ பேரிடரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும், பின்தங்கிய நிலையிலுள்ளதுமான இப்பிரதேச செயலகப் பிரிவின் கிராமங்கள் தொடர்பில் அதிவிசேட கவனம் செலுத்துமாறு ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.

கல்வி அபிவிருத்தி, செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையின் வளப் பற்றாக்குறைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குதல், காணியற்ற மக்களுக்குக் காணிகளைப் பகிர்ந்தளித்தல் மற்றும் வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கப்பட வேண்டிய காணிகளுக்கான கள ஆய்வுகளைத் துரிதப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

செட்டிக்குளம் பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கும் ஆளுநர் தலைமையிலான குழுவினரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டன.