Skip to main content

Northern Provincial Council

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை நாளை புதன்கிழமையிலிருந்து (21.05.2025) காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை நாளை புதன்கிழமையிலிருந்து (21.05.2025) காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறும் அதை மீறிச் செயற்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையடுத்து அது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) நடைபெற்றது.

764, 768 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் சேவைகளை நடத்தும் பேருந்துகளின் உரிமையாளர் சங்கத்தினர் கலந்துகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெரியப்படுத்தினர். ஒற்றுமையாக இணைந்து தங்களது முடிவுகளை பேருந்து சங்கங்கள் அறிவித்தால் அதைச் செயற்படுத்த தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஆளுநர், இல்லாவிடின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரியப்படுத்தினார்.

பேருந்து சங்கங்களிடையே இணக்கம் எட்டப்பட்டிருக்காத நிலையில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் அனுமதிக்கப்பட்ட வழித்தட அனுமதிக்கு அமைவாக, 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்துகள் யாவும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து தமது சேவைகளை ஆரம்பிக்கும். 764 வழித் தடப் பேருந்துகள் அங்கிருந்து பலாலி வீதியூடாக யாழ்ப்பாணத்தை வந்தடையும். 769 வழித் தடப் பேருந்துகள் அங்கிருந்து காங்கேசன்துறை வீதியூடாக யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

இதேவேளை 764 மற்றும் 769 ஆகிய இரண்டு வழித்தடப் பேருந்துகளும் யாழ்ப்பாண நகரில் ஒரேயிடத்திலிருந்து புறப்படுவதில் சிக்கல்கள் இருப்பதாக 769 வழித்தடப் பேருந்து சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இது தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருடன் கலந்துரையாடி மாற்றிடத்தை விரைவில் ஒழுங்கு செய்துதருவதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, ஆளுநரால் அறிவிக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர், யாழ்ப்பாண மாவட்ட நீண்டதூர பேருந்துச் சங்கம், 764, 768, 769 வழித்தட பேருந்துச் சங்கங்கள், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை மற்றும் பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.