Skip to main content

Northern Provincial Council

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளில் சோதனைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் (NTC) வழித்தட அனுமதி வழங்கப்பட்டு, வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்குச் சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்குப் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், அதிகார சபையின் சோதனையின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பேருந்து ஒன்றுக்கு 20,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்ட பேருந்துகளிலும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மன்னார் – கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட பேருந்தில் அதிகார சபையின் திடீர் பரிசோதகர்கள் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த பேருந்து செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பயணிகளுக்குப் பயணச்சீட்டுகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகார சபையால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில், உரிய அனுமதி நிபந்தனைகளை மீறியமைக்காக குறித்த பேருந்துக்கு 20,000 ரூபா நிர்வாகத் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் வடக்கு மாகாணம் முழுவதும் மேலும் தீவிரப்படுத்தப்படும். அண்மைக் காலமாகச் சில சொகுசுப் பேருந்துகளின் சேவைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக, பேருந்தின் ஆசனங்களைச் சரிப்படுத்த முடியாத நிலை காணப்படுதல், ஆசனங்களில் மூட்டைப்பூச்சிக் கடிக்கு உள்ளான சம்பவங்கள் மற்றும் குளிரூட்டி (A/C) முறையாகச் செயற்படாமை போன்ற பல குறைபாடுகள் தொடர்பில் பயணிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

எனவே, பயணிகள் இத்தகைய சொகுசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது மேற்கண்டவாறான குறைபாடுகளையோ அல்லது முறைகேடுகளையோ எதிர்கொண்டால், அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தமது முறைப்பாடுகளைத் தாமதமின்றி அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.