Skip to main content

Northern Provincial Council

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரில் களமிறங்கிய ஆளுநர்

வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் பிரதேச மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பார்வையிட்டார்.

இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத 8 கிலோமீற்றர் நீளமான கள்ளிக்குளம் பிரதான வீதி தொடர்பில் மக்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்குச் சொந்தமான இந்த வீதியை சுமார் 800 குடும்பங்கள் பயன்படுத்தி வருவதுடன், இரண்டு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் இது முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.

வீதி நீண்டகாலமாகச் சீரமைக்கப்படாததால், போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் இடையூறு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்களின் கோரிக்கையை கவனத்துடன் கேட்டறிந்த ஆளுநர், கள்ளிக்குளம் பிரதான வீதியை இரண்டு கட்டங்களாகப் புனரமைப்பதற்குத் தேவையான நிதியை பிரதேச சபைக்கு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வீதி சீரற்ற நிலையில் காணப்படுவதன் காரணமாக முறையான பேருந்துச் சேவையும் இடம்பெறாத நிலைமை தொடர்பிலும் மக்கள் தெரிவித்தனர். இதனுடன், யானை வேலி அமைத்துத் தர வேண்டியதன் அவசியமும் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, தங்களது வயற்காணிகளை வனவளத் திணைக்களம் எல்லைக் கற்களை நட்டு ஆக்கிரமித்துள்ளதாகவும், தமது வாழ்வாதாரத்துக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளிலும் அண்மைக்காலத்தில் தலையீடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தங்களுக்கு உரிய காணி ஆவணங்கள் இல்லாத நிலை, புதிய குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்படாமை மற்றும் வீடமைப்புத் திட்டங்களின் தேவை உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும், கிராமத்தில் வசிக்கும் 18 மாற்றுத் திறனாளிகள் இணைந்து சுயதொழில் முயற்சியொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கான கட்டட வசதி இல்லாத நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் சனசமூக நிலையக் கட்டடத்தைப் புனரமைத்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதனை சாதகமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார்.

அத்துடன், வீடுகளுக்கான மின் இணைப்புகளை மாற்றித் தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

மக்களால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், ஒவ்வொரு பிரச்சினையும் உரிய வகையில் ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் அழைத்து வந்து, மக்களின் பிரச்சினைகளை களத்தில் வைத்து ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளுநரின் இக்கட்டப் பயணத்தின் போது வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் சுதாகர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனர்.

இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) சனிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை வரவேற்ற ஆளுநர், வடக்கு மாகாணத்தின் பொதுவான நிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள் மற்றும் மாகாணம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நிலைமை, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதலீடுகளை ஈர்ப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குக் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரித் திட்டங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகள், அவற்றின் தாக்கம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகள், உலகளாவிய நெருக்கடிகளால் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாட்டிலிருந்து இடம்பெறும் புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களிடையே காணப்படும் அபிப்பிராயங்கள் மற்றும் பார்வைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது அல்லது இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளைப் பிரித்து புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பில், அவற்றை எதிர்காலத்தில் வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி வல்லமை உறுதியாகக் காணப்படுமாயின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் தற்போதைய பணிகள், முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில், தற்போது சுமார் ஐந்து மடங்கு அதிகமான நிதியை திணைக்களம் கையாளும் நிலையில், அதற்கேற்ப தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும், பணிச்சுமைக்கேற்ப தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கும் உள்ளூராட்சி ஆணையாளரால் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வருமானப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஆளணி வெற்றிடங்களும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில், இத்தகைய ஆளணி பற்றாக்குறை வடக்கு மாகாணத்துக்கு மாத்திரம் மட்டுப்பட்ட பிரச்சினையல்ல் நாடு முழுவதும் இந்நிலை காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது, இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளை இரண்டாகப் பிரித்து புதிய பிரதேச சபைகளை உருவாக்குவது உள்ளிட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான சில முன்நகர்வுகள் கடந்த காலங்களிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், உள்ளூராட்சி மன்றமொன்றைத் தரம் உயர்த்துவதோ அல்லது புதிய உள்ளூராட்சி மன்றமொன்றை உருவாக்குவதோ தனித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இருக்க முடியாது, அவற்றை எதிர்காலத்தில் நிர்வகித்து கொண்டு செல்லத் தேவையான நிதி வல்லமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அவ்வாறு உரிய நிதி வளம் இருப்பின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் முன்மொழிவுகளை அனுப்பி வைக்கலாம் எனவும், அவை உரிய முறையில் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி சட்டங்கள் பலவும் பழைமையானவையாக இருப்பதாக உள்ளூராட்சி ஆணையாளரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தற்போதைய சமூக மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் திருத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது. மாற்றம் செய்யப்பட வேண்டிய சட்டப் பிரிவுகள் மற்றும் தேவையான திருத்தங்கள் தொடர்பிலான பரிந்துரைகளைத் தொகுத்து அனுப்பி வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் தீயணைப்புச் சேவைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் யாழ். மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலும் தீயணைப்புப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களில் வெளிவாரி பணியாளர்களாகக் கடமையாற்றி வரும் பணியாளர்களை நிரந்தர சேவையில் உள்ளீர்ப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான உரிய கோரிக்கையை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் குறிப்பிட்டதுடன், வடக்கு மாகாணத்துக்குத் தனித்துவமான வகையில் இப்பிரச்சினை காணப்படுவதை உணர முடிவதாகவும், இதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான வாகனங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் வளத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நிர்வாகம் மற்றும் நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.09.2026) சனிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் அளவுக்கு ஏற்ப பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை காணப்படுவது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்த அமைச்சர், இதனை நிவர்த்தி செய்வதற்காக ஆட்சேர்ப்புகளுக்கு தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதுடன், அரசாங்கமும் தேவையான ஆட்சேர்ப்புகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது என்பதற்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதியை குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், கடந்த காலங்களில் ‘வடக்கின் வசந்தம்’ போன்ற திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் அதிகளவான நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், ஒதுக்கப்படும் நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கான தயார்நிலையில் மாகாண நிறுவனங்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற முரண்பாடுகள் மற்றும் போரால் மக்கள் எதிர்கொண்ட பாதிப்புகளை அடுத்த தலைமுறையும் எதிர்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், அனைவரும் ஒன்றிணைந்து முரண்பாடுகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.

நாடு தற்போது பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கிப் பயணித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அரச சொத்துகளை விற்பனை செய்வதையோ, பணத்தை அச்சிடுவதையோ அல்லது அதிகளவில் கடன் பெறுவதையோ தவிர்த்து, வரி ஏய்ப்பை கட்டுப்படுத்துதல், ஏற்றுமதியை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் திறைசேரி வருவாயை வலுப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையை வலுப்படுத்துதல், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குதல், சிறந்த கழிவு முகாமைத்துவத்தை உருவாக்குதல் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே அரசாங்கம் நிதியை முன்னுரிமையுடன் செலவிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் போதுமான நிதி வளம் காணப்பட்டமையாலேயே டித்வா பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளுக்கு அரசாங்கத்தால் உடனடியாக நிதி வழங்க முடிந்ததாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது ஏற்றுமதி மூலம் கிடைக்கும் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்காலத்தில் 15 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

திறைசேரியில் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அவர், அந்த நிதியை மக்களின் தேவைகளுக்காக அடிமட்டம் வரை கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறினார். மாவட்டச் செயலகங்கள், மாகாண சபைகள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மக்களின் தேவைகளை இனங்கண்டு அதற்கேற்ப நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிலையில், அரச ஊழியர்களின் நலன்களுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2027 ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரவுள்ள அடிப்படைச் சம்பளத்தையே அடிப்படையாகக் கொண்டு தற்போது மேலதிக நேரக் கொடுப்பனவு கணக்கிடப்படுவதாகவும், அந்தக் காலப்பகுதியில் ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியமும் 2027ஆம் ஆண்டுக்கான அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்புகள் பெரும்பாலும் கொடுப்பனவுகளாக இருந்த நிலையில், தமது அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தையே அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு முழுவதும் சுமார் 350,000 ஆளணி வெற்றிடங்கள் காணப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு 35,000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை நிருவாக சேவை, இலங்கை திட்டமிடல் சேவை, கணக்காளர் சேவை, பொறியியல் சேவை உள்ளிட்ட அரச சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 125,000 ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக நாட்டில் முறையான ஆட்சேர்ப்புகள் இடம்பெறாத நிலை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, திணைக்களத் தலைவர்கள், ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களிடம் காணப்படும் பல வாகனங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானவை எனத் தெரிவித்த அமைச்சர், சுமார் 2,000 புதிய வாகனங்களில் ஒரு தொகுதியையாவது இவ்வாண்டு இறுதிக்குள் இறக்குமதி செய்து திணைக்களங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகள் வினைத்திறனுடனும் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் இருந்து அதிக செலவு செய்து அலுவலகங்களுக்கு வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லாத வகையில், அவர்கள் நாடி வரும் சேவையை உரிய முறையில் வழங்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

அரச சேவைகள் இனம், மதம், மொழி, கட்சி உள்ளிட்ட எந்தவொரு வேறுபாடும் இன்றி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உள்ளூராட்சி வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்கள் தமது சேவைகளை மக்களுக்கு தெளிவாக அறிமுகப்படுத்துவதுடன், மக்களின் தேவைகளை அவர்களைத் தேடிச் சென்று இனங்கண்டு சேவைகளை வழங்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண சபை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 99 சதவீதத்தை செலவிட்டுள்ளமைக்கு மாகாணத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்திலும் ஒதுக்கப்படும் நிதியை அதேபோன்று வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், நிர்வாகம் மற்றும் நிதிக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

 

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டார்.

இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஆளுநர் அலுவலக உதவிச் செயலராகக் கடமையாற்றிய க.ஏகாந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் கீரி கடற்கரையில் பிரம்மாண்ட உலக சுற்றுலா தின விழா

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா வளங்களை சர்வதேச மட்டத்தில் அறிமுகப்படுத்தி, பிராந்திய சுற்றுலாத்துறையையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம் செப்ரெம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களும் மன்னார் கீரி கடற்கரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் விழா, வடக்கு மாகாணத்தின் இயற்கை வளங்கள், பாரம்பரியம், கலை மற்றும் பண்பாட்டு சிறப்புகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மாகாணத்தின் பாரம்பரியக் கலைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலாவிகள் பங்கேற்கும் பல்வேறு கடற்கரை விளையாட்டுக்கள், மன்னார் மாவட்டத்தின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுகள், உள்ளூர் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய கண்காட்சிகள் மற்றும் விற்பனை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மன்னார் பிராந்தியத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள புதிய சுற்றுலா உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள், மன்னாரின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த ஏனைய பங்காளிகளின் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, இரு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பு, தேவையான உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாகாண கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாண மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகளில் காணப்பட்ட நடைமுறைச் சவால்களை விரைந்து தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுக்குமாறு வழங்கப்பட்ட பணிப்புரையின் தொடர்ச்சியாகவே இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில், கந்தரோடை குளம், அரலி பாலத்துக்கு அண்மையில் உள்ள வழுக்கி ஆற்றுப்படுக்கையில் நன்னீரைத் தேக்கும் செயற்றிட்டம் மற்றும் கற்குளம் – அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடனும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, குறித்த பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரித்தல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்தல் மற்றும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்தக்கூடிய நிலைமையை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் சிறப்புற இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி – ஆளுநர் பங்கேற்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா 2026-ஐ முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று (07.09.2026) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தமது பாரியாருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைமாமணி சாரதா ராகவ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், சிறப்பான குரல் வளம், இசை நயம் மற்றும் பக்தி உணர்வுடன் பாடல்கள் வழங்கப்பட்டதுடன், அவருடன் இணைந்து பங்கேற்ற கலைஞர்களின் இசை வழங்குகையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. கலைமாமணி சாரதா ராகவ் அவர்களுடன் மிருதங்கக் கலைஞர் ரமேஷ;, விசைப்பலகை கலைஞர் ராஜினிகாந்த் உள்ளிட்ட இசைக் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பி, வவுனியாப் பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.